தமிழர் கழகம் அமைப்பறிக்கை
உலகில் முதலில் தோன்றிய இனம் தமிழர் இனம். அடுத்தடுத்து ஏற்பட்ட கடற்கோள்களின் விளைவாக உலகம் முழுவதும் பரவிய இனமும் அதுதான். அமெரிக்கத் தொல் குடிகளான மாயன் மரபினரிலிருந்து ஆசுத்திரேலியப் பழங்குடியினர் வரை தமிழரினத்தின் கிளையினரே. அதனால்தான் "யாதும் ஊரே! யாவரும் கேளிர்!" என்கின்ற ஒப்பற்ற உயரிய கோட்பாட்டிற்கும் நாகரிகத்திற்கும் சொந்தக்காரர்களாக தமிழர்களாகிய நாம் விளங்கி வருகிறோம்.
இப்படி உயரிய நாகரிக, பண்பாட்டு மரபினரான தமிழரின் தாயகங்களாக இன்றைக்கு விளங்கி வருபவை தமிழ்நாடும் தமிழீழமுமே.
கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக தமிழினத்தின் மீது பல்வேறு திரிபு இனத்தவரின் போர் மற்றும் பண்பாட்டு ஊடுருவல்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாக நாம் அடிமையுற்று தன்னிலைக் கெட்டு வாழ்ந்து வருகின்ற அவலச் சூழலில் உள்ளோம். மாற்று இனத்தவரின் ஆளுமைக்குள் நம் தமிழும் தமிழரும் தமிழ்நாடும் மீள முடியா இன்னலுக்கு ஆட்பட்டுள்ளது. இவ்வடிமைத் தளையிலிருந்து மீள இதுவரை எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் அரைகுறை முயற்சியாகளாகவே இருந்து வருகின்றன.
இன்று வளர்ந்து வரும் பன்னாட்டு வல்லரசிய சூழலிலும் இந்தியச் சூழலிலும் தமிழினத்தின் மீதான தாக்குதல்கள் பன்னூறு மடங்கு அதிகமாகியுள்ளன. அழிந்து வரும் தொல்லினங்களின் பட்டியலில் நம் தமிழினம் சேர்ந்துவிடாதிருக்கும் பொருட்டு அதன் மீட்சிக்காகப் போராட வேண்டியது தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் உடனடிக் கடமை ஆகிறது. அதனால்தான் தமிழர் கழகம் தோற்றம் கண்டுள்ளது.
கழகத் தோற்றத்திற்கான வரலாற்றுத் தேவை
வணிகத்திற்காக என்று இத்துணைக் கண்டத்திற்குள் நுழைந்த ஐரோப்பியர் தங்களின் வணிக முதலீட்டின் வழியாக இங்குள்ள தமிழ்நாட்டை ஆண்டுக் கொண்டிருந்த மன்னர்களை விலைக்கு வாங்கி தங்கள் அரசினை நிறுவும் முயற்சியில் ஈடுபட்டனர். விலை போக மறுத்த மன்னர்களை போர்களின் மூலம் வீழ்த்த முற்பட்டனர். அவ்வாறு விலை போக மறுத்த நெற்கட்டுச்செவல் பூலித்தேவன், முத்து வடுகர், வேலுநாச்சியார், மருதிருவர், தீரன் சின்னமலை போன்ற தமிழ் மன்னர்களின் அரசுகள் ஆங்கிலேயப் படைகளால் சூறையாடப் பட்டன. இது போன்றே இத்துணைக் கண்டத்தில் பல்வேறு நாடுகளிலும் ஐரோப்பியரின் ஆட்சிப் பகுதிகள் உருவாகின. அவ்வந்தேறி ஐரோப்பியர்களுக்குள் ஏற்பட்ட பூசலில் பிரிட்டனின் கிழக்கிந்திய குழுமத்திற்கே முழு வெற்றி கிட்டியது. ஒரு நிலைத்த பிரித்தானிய இந்திய அரசு உருவாகியது.
அவ்வரசின் ஆளுமைக் குழுவில் தம்மையும் பங்காளிகள் ஆக்கிக் கொள்ளுமாறு அதுவரை இங்கு சாதி வழியாக ஆளுமை செய்து வந்த பார்ப்பனக் கூட்டம் இந்தியர் என்ற பெயரால் வேண்டுகோள் விடுத்தது. அவ்வேண்டுகோள் புறக்கணிக்கப் பட்ட சூழலில் போராட்டத்திலும் ஈடுபட்டது. அதற்குக் கருவியாக இந்திய தேசியப் பேராயம் என்கிற காங்கிரசுக் கட்சியைப் பயன்படுத்தியது. தாங்கள் நடத்திய அதிகாரப் பகிர்வுப் போராட்டத்தை விடுதலைப் போராட்டமாக நாட்டு மக்களிடம் விதைக்கவும் செய்தது.
அடிமைத் தளையிலிருந்து விடுபட வேண்டும் என்கிற தமிழரின் உணர்வின் வெளிப்பாடாக இப்போராட்டத்தை கருதியதால் வ.உ.சி. போன்ற தன்னிகரற்ற தமிழர்கள் அப்போராட்டத்தில் ஈடுபட்டு இன்னல்களை ஏற்றுக் கொண்டனர். அது போலவே சுபாசு சந்திர போசின் தலைமையிலான இந்திய தேசியப் படையிலும் பெரும்பங்காற்றி உயிரிழந்தனர். இப்படி தமிழினத்தவரின் உழைப்பில் உருவான இந்திய விடுதலை அரசு தமிழர்களின் உரிமைகளை நசுக்குவதிலும் பார்ப்பனிய - வணிக மேலாண்மையை நிறுவதிலுமே முனைப்பு காட்டி வருகிறது. இதில் பேராயம், பா.ச.க என்று வேறுபாடில்லை.
மறுபுறத்தில் சிங்காரவேலர் என்கிற தமிழரின் முன்முயற்சியால் உருவான இந்தியப் பொதுவுடைமைக் கட்சியோ, அதிலிருந்து கிளைத்த பல்வேறு இந்தியப் பொதுவுடைமைக் குழுக்களோ அவை தோற்றம் கொண்ட நாள் முதல் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையாக, தமிழ்த் தேசியம் என்று வரும்போது கற்பனை அனைத்துலகியம் பேசி தமிழரின் உரிமையைப் புறந்தள்ளி வருகின்றன. இந்திய தேசியம் என்று வரும்போது மட்டும் ஆதிசங்கரரின் அத்வைத மாயையிலிருந்து விடுபட்டு அவ்வாண்டை இந்திய தேசியத்தை இறுகப் பற்றிக் கொண்டு ஒற்றுமைக் கூப்பாடு போட்டு வருகின்றன. உண்மையான அனைத்துலகியம் (சர்வ தேசியம்) என்பது தொல்தமிழினத்தின் விடுதலையிலிருந்து முகிழ்க்கும் என்பதே உண்மை. பொதுவுடைமைக் கோட்பாட்டிற்குப் புறம்பாக தேசிய இனப் போராட்டங்களை மறுத்து வரும் இவ்விந்தியப் பொதுவுடைமைக் கட்சிகளில் தம் உழைப்பை வீண்டித்துக் கொண்டு வரும் தமிழர்களால் ஆற்றுச் சிக்கல்களில் கூட நம் உரிமையை மீட்க முடியாமல் தவித்து வருகிறோம்.
பேராயக் கட்சியின் போராட்டங்களின் விளைவாக ஆங்கிலேய நிருவாக நிலைகளில் பார்ப்பனர்கள் ஆளுமை செய்ய வந்தனர். அதனைப் பார்த்த அயோத்திதாசப் பண்டிதரைப் போன்ற தலைவர்கள் அவ்விடங்களில் தம் சாதியைச் சார்ந்தவர்கள் பங்கேற்க ஒதுக்கீடு கேட்டு பறையர் மகாசனசபையை உருவாக்கினர். இட வொதுக்கீட்டிற்கான அப்போராட்டம் இன்னும் விரிந்த தளத்தில் பார்ப்பனர் அல்லாதார் உரிமை என்கிற பெயரில் இன்றைய பிற்படுத்தப் பட்ட சாதிகளின் ஒதுக்கீட்டுக் கோரிக்கையாக வளர்ந்தது. திராவிடர் இயக்கமாக அது மலர்ந்தது.
அன்றைய சென்னை மாகாணத்தில் தெலுங்கு, மலையாள, கன்னடப் பகுதிகளில் அவ்வியக்கம் வேர் ஊன்ற வில்லை. தமிழ்ப்பகுதிகளில் மட்டுமே அது இயங்கி வந்தது. தமிழர்கள் மட்டுமே பார்ப்பனர்களுக்கு எதிரான இடவொதுக்கீட்டு உரிமைக்காகப் போராடினர். அதன் வழியாக கிடைத்த வெற்றிகளெல்லாம் அவ்வியக்கத்தை வழி நடத்திச் சென்ற தெலுங்கினச் சாதியினருக்கே மிகவும் பயன்பட்டு வந்தது.
கல்வி, வேலை வாய்ப்புகளில் அன்றைக்கு இருந்த அதே பிற்படுத்தப் பட்டவர் பட்டியல் மொழி வழி மாநிலங்கள் அமைந்து தெலுங்கு, கன்னட, மலையாளிகளுக்கான தனி மாநிலங்கள் உருவாகிப் பிரிந்த பின்னரும் நம் தமிழ்நாட்டில் நீடித்து வருகிறது. இதனால் அண்டை மாநில தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் தமிழகப் பணியிடங்களை நிரப்பி வருகின்றனர். இதனால் வந்தேறிகளின் குடியேற்றம் தமிழகத்தில் அதிகமாகி விட்டது. இதைச் சுட்டிக்காட்டி தமிழ்ச்சாதிகளின் இடவொதுக்கீட்டுக்கான புதிய பட்டியலை உருவாக்கிய சட்டநாதன் குழுவின் பரிந்துரையை ஏற்றுக் கொள்ளாமலும் நடைமுறைப் படுத்தாமலும் இன்றளவும் தமிழர்களுக்கு இரண்டகம் செய்து வருகின்றன திராவிட இயக்கத் தலைமையிலான தமிழக அரசுகள்.
இப்படி இந்திய தேசியம், திராவிட தேசியம், மாயை அனைத்துலகியம் ஆகிய முப்பெரும் கூறுகளால் ஏமாற்றப்பட்டு வாழ்வுரிமை சூறையாடப்பட்ட தமிழர்களின் உரிமைக் குரலை ஒலித்திடவே தமிழர் கழகம் கால் கொண்டுள்ளது.
தமிழ்த்தேசிய இனத்தின் மீதான குடியாட்சி மறுப்பு
இந்திய துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு இன மக்களைச் சுரண்டிக் கொழுப்பதோடு அந்த இன மக்களின் அரசியல், பொருளியல், குமுக (சமூக) உரிமைகளைக் கூட இந்திய ஆதிக்க அரசு மறுத்து வருகிறது. எந்த அதிகாரமும் இல்லாத பொம்மை அரசுகளை இன்றைய தேர்தல் முறைப்படி ஏற்படுத்துவதும் தான் விரும்புகிற போக்கில் கலைப்பதும் இந்திய வல்லரசிய ஆட்சிக்குரிய இயல்புகளாகும். அப்படி இறையாண்மையற்ற பொம்மை ஆட்சிப் பரப்புகளைக் கூடத் தன் விருப்பத்திற்கு ஏற்ப வெட்டிச் சிதைப்பதும், ஒட்டிச் சேர்ப்பதுமாக உள்ளது. அப்படி நம் தமிழகம் கச்சத்தீவு, நெய்யாற்றின்கரை, நெடுமங்காடு, செங்கோட்டை வனப்பகுதி, தேவிகுளம், பீர்மேடு, பாலைக்காடு, வெங்காளூர், கொள்ளேகாலம், கோலார் தங்கவயல், சித்தூர், வடவேங்கடம், திருக்காளத்தி, பழவேற்காட்டின் பெரும்பகுதி என எல்லையெங்கும் பல சதுர கல் பரப்புகளை இழந்து சுருங்கியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அந்தந்த நாட்டு அரசுகளால் தமிழர்கள் துன்பத்திற்கு உள்ளாக்கப்படும் போது அவர்களின் உரிமைகளுக்காக இந்திய அரசின் தூதுவர்களோ, இந்திய அரசோ குரல் கொடுப்பதில்லை. தமிழக மக்கள் அதற்கான போராட்டங்களில் ஈடுபடும்போதெல்லாம் தம் காவல்துறை, படைத்துறை ஆகியவற்றின் வல்லாண்மையால் அடக்கி ஒடுக்கி வருகிறது. குறிப்பாக ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்குத் துணையாக தமிழகத்தில் நடைபெறும் எந்த போராட்டத்தையும் தீவிரவாதப் போராட்டம் என்று இந்தியா ஒடுக்கி வருகிறது.
சிங்களப் பேரினவாத அரசின் ஒடுக்குதல்களுக்கு அஞ்சி அங்கிருந்து புலம் பெயர்ந்து தமிழகத்திற்கு வரும் ஈழத்தமிழர்களை குற்றப் பரம்பரையினர் போல் நடத்துகிறது இந்தியா. சிறைகளை விடக் கொடிய முகாம்களில் அவர்களை அடைத்து வைத்து வதைக்கிறது. பன்னாட்டு ஏதிலிகள் மறுவாழ்வு கழகங்களின் பரிந்துரைகளை எல்லாம் குப்பைக் கூடையில் போட்டு தமிழினத்தின் மீதான வன்மத்தையும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் மீது காட்டுகிறது.
தாய்மொழியில் கற்பதைத் தடை செய்யும் விதமாக ஆங்கில, இந்தி பள்ளிகளை ஊக்கப்படுத்தியும் தாய்மொழி கல்வி தரும் அரசு பள்ளிகளை மூடியும் வருகிறது இந்தியா.
அனைத்து நாடுகளின் ஆற்று நீர் சிக்கலுக்கான தீர்வுகளைக்கூட ஏற்று நடைமுறைப் படுத்தாமல் அண்டை தேசிய இனங்களுக்குள் மோதலை ஏற்படுத்தும் விதமாக இழுத்தடிப்பதும், கழுத்தறுப்பதுமாக இந்திய அரசு செயல்பட்டு வருகிறது.
வெளிநாட்டுக் குழுமங்களுக்கு விற்பனைச் சந்தையை திறந்து விட்டும் வெளிநாட்டு முதலீட்டு வழியாக மக்களைக் சுரண்ட வழி செய்தும், வல்லரசுகளுக்கு துணையாகிறது இந்தியா. வல்லரசுகளின் ஏவலுக்கு அடிபணிந்து இந்நாட்டு மக்கள் பல்லாண்டு காலமாகப் போராடி உருவாக்கிய நலச் சட்டங்களையும், திட்டங்களையும் தூக்கி எறிந்து விட்டு சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைச் சட்டங்களை உருவாக்குவதையும் நடைமுறைப் படுத்துவதையுமே தம் கடமையாக இந்திய அரசும் நாடாளுமன்றமும் கருதி வருகின்றன.
தமிழ்த் தேசிய இனத்தின் மீதான பொருளியல் ஒடுக்குமுறை
வளமான நம் தமிழ் நிலத்தைச் சுரண்டுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது இந்தியா. மறைமுகமாகவும், நேரடியாகவும் வரி விதிப்புகளின் மூலமாக தமிழகத்தை சூறையாடுகிறது. குசராத்து மார்வாரி முதலாளிகளின் செயற்கை இழை துணிகளுக்கு வரி விலக்கு அளித்து அதனால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்ட பருத்தி நூலுக்கு தனி வரி என்று போட்டு தமிழக நெசவாளர்களின் தலையில் மிளகாய் அரைக்கிறது.
இதைப் போன்றே வேளாண் விளை பொருள்களுக்கு உரிய விலை தராமலும் இடுபொருளுக்கு விலையை உயர்த்தியும் முதலாளிகளுக்குச் சார்பாக தமிழக உழவர்களைச் சுரண்டுகிறது. நம்முடைய விதைகளை பயன்படுத்துவதிலிருந்து விலக்கி வைத்து பன்னாட்டு, வடநாட்டு முதலாளிகளுக்குச் சார்பாய் மரபீனி விதைகளை அறிமுகப் படுத்தி உழவர்களை வேரற்றவர்களாக்கி வருகிறது. மரபீனி விதைகளுக்கு எருவாக செயற்கை வேதிப்பொருள்களையும் அவற்றின் வழியாகப் பரப்பப்பட்ட பயிர் உண்ணிகளை அழிப்பதற்கு பூச்சி மருந்துகளையும் விற்பதன் வழியாகவும் தமிழர்களை சுரண்டி வருகிறது இந்தியா. மரபு வழி வேளாண்மையைச் சிதைத்து வெறியாட்டம் போடுகிறது.
ஆற்று நீர் சிக்கல்களில் தமிழர்களின் உரிமைகளுக்கு செவி கொடுக்க மறுத்து அண்டை தேசிய இனங்களுக்குச் சார்பாய்ச் செயற்பட்டு தமிழக விளை நிலங்களை பாழாக்குகின்றது. அப்படி வறண்ட நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களின் நிலப்பறிப்பு மண்டலங்களுக்குப் பிடுங்கித் தந்து தமிழக மக்களை ஊரற்றவர்களாகவும் நாடற்றவர்களாகவும் அலைய விடுகிறது. இப்படி பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழகத்தை விற்பதன் வழியாக உலக வங்கியின் கட்டுப்பாடுகளை நிறைவேற்றி மேலும் புதிய கடன்களை வாங்கி தம் ஒடுக்குமுறைக் கருவிகளை வலுப்படுத்தி வருகிறது இந்தியா.
இத்தகு பன்னாட்டுச் சுரண்டல்களுக்கு இந்தியத் தரகு முதலாளிகளான வடநாட்டு மார்வாரிகளும் துணை நிற்பதால் அவர்களுக்குச் சார்பான சட்டங்களை இயற்றி தமிழகத்தின் சிறு வணிகர்களின் வாழ்வுரிமையைக் கூட கேள்விக் குறியாக்கி உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிப்பிடலாம். மக்களில் மிகச் சிறுபான்மையினருக்கு மட்டுமே அயோடின் சத்துக் குறைபாடு உள்ளது. அவர்கள் மட்டும் அயோடின் கலந்த உப்பு பயன்படுத்தினால் போதுமானது. ஆனால் அயோடின் கலந்த உப்பை அனைவரும் பயன்படுத்துகின்ற வகையில் எல்லா உப்பிலும் அயோடின் கலந்தே விற்க வேண்டும் என்று சட்டம் செய்துள்ளனர். அவ்வயோடின் விற்பனை உரிமையை மார்வாரி முதலாளிகளிடம் மட்டுமே விட்டு வைத்துள்ளது இந்தியா.
பழவேற்காடு முதல் குளச்சல், தேங்காய்பட்டினம் வரையுள்ள தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமைக்கு எதிராக பல்வேறு தடைகளை நேரடியாகவும்; ஆந்திர, மலையாள மீனவர்களின் வழியாக மறைமுகமாகவும் ஏற்படுத்தி வருகிறது இந்தியா. கச்சத் தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்ததால் இலங்கை மற்றும் இந்திய கடற்படை மூலமாக மீனவர்களின் வாழ்வுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளது இந்தியா. இதுவரை ஆயிரக் கணக்கான மீனவர்களை இந்திய - இலங்கை கூட்டுச் சதிக்கு பலியாகத் தந்துள்ளோம். வளமான நம் கடல் வளம் பன்னாட்டு முதலாளிகளின் நலத்திற்கான திட்டங்களால் வீண்டிக்கப்பட்டு வருகிறது.
நிலக்கரி முதல் கார்னைட் மணல் வரையிலான கனிம வளங்கள் நிறைந்த நாடு நம் தமிழ்நாடு. இக் கனிம வளங்களை கேட்பாரற்ற வகையில் சுரண்டிக் கொழுக்கிறது இந்தியா. இதுவரை தானே நேரடியாகச் சுரண்டி வந்த நிலை போக இன்றைக்கு பன்னாட்டு, வடநாட்டு முதலாளிகளுக்கு உரிமம் வழங்குவதன் வழியாகச் சுரண்டிச் செல்ல வழி விட்டுள்ளது இந்தியா. அக்கனிம வளங்களுக்கான குறைந்த அளவு உரிமத் தொகையைக் கூட தம் பொம்மை அரசான தமிழக அரசுக்கு வழங்குவதில்லை. அக்கனிம வளங்கள் நிறைந்த நிலங்களிலிருந்து தமிழக மக்கள் விரட்டி அடிக்கப் பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளுள் பெரும் பகுதியை தமிழர் அல்லாதவர்களுக்கே அளித்து தமிழக மக்களின் பொருளியல் அவர்களுக்கு ஊதியமாகச் சேருமாறு செய்து அவர்களை இங்கேயே நிலைப்படுத்தியுள்ளது. அப்படி நிலைத்த மாற்றினத்தார் அனைவரும் தமிழரின் உரிமைக் கோரிக்கைகளுக்கு எதிராகச் செயல்படுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் வளமார்ந்த மலை வளத்தை அண்டை மாநிலங்களுக்குத் துண்டாடி அளித்துள்ளது இந்திய அரசு. எஞ்சிய மலை வளமும் அந்நிய முதலாளிகளின் நலனுக்காய் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. அடந்த காடுகள் அழிக்கப்பட்டு தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. அக்காடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் விரட்டி அடிக்கப்படுகின்றனர். தேனெடுத்தும் காடு தரும் வளங்களைச் சேர்த்தும், கால்நடை மேய்த்தும் வரும் அவர்களின் வாழ்வாதாரங்கள் முடக்கப்படுகின்றன. காடு தரும் வளங்கள் அனைத்தும் வணிகர்களின் சுரண்டலுக்கே பயன்படுத்தப் படுகின்றன. அவ்வணிகர்கள் தமிழராய் இல்லாதிருக்குமாறு பார்த்துக் கொள்ளப் படுகின்றனர்.
ஓடாத ஆறுகளில் நிலைத்து நின்று நீர்வளம் காக்கும் மணலை அள்ளித் தின்பதற்கென்றே ஒரு கூட்டம் திரிந்து கொண்டுள்ளது. அக்கூட்டத்திற்கு இசைவாய், துணையாய் இந்த அரசும் அதன் அலுவலர்களும் செயல்பட்டே வருகின்றனர்.
உலகில் கழித்துக் கட்டப்பட்ட, புறந்தள்ளப்பட்ட வேதித் தொழிலகங்களை தமிழகத்தில் நிறுவதன் மூலமாக தமிழகத்தை வாழ்வதற்குத் தகுதியற்ற நிலமாக மாற்றி வருகின்றது இந்தியா. குறிப்பாக கல்பாக்கத்திலும் கூடங்குளத்திலும் நிறுவப்பட்டுள்ள அணு உலைகளின் மூலமாக தமிழர்கள் அஞ்சி அஞ்சி வாழ்கின்ற சூழலுக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.
தமிழ்த்தேசத்தின் மீதான குமுக (சமூக) ஒடுக்குமுறை
இப்படி அரசியல் மற்றும் பொருளியல் வழியாக ஒடுக்குண்டு வரும் தமிழர்கள் தமிழர்களாக எழுந்து போராடாத வகையில் சாதித் தளை நம்மைக் கட்டிப் போட்டுள்ளது.
சாதிய ஒடுக்குமுறை:- தொடக்கத்தில் தொழில் வழி சாதிகளாக நிலவி வந்ததை ஆரியப் பார்ப்பனரின் வருகைக்குப் பின்னர் புகுந்த நால் வருணக் கோட்பாடு தமிழகத்தில் பிறப்பு வழிச் சாதிகளாக உருமாற்றியது. தமிழகத்தில் அரசையும் மக்களையும் வழிநடத்துகின்ற அறிவு மரபினராக இருந்த சாதிகளை தூய்மைக் கேடானதாகவும் தீட்டுக்குரியதாகவும் கருதப்பெற்ற தூய்மைப் பணி செய்யும் தீண்டத் தகாத சாதிகளாக்கியது. அப்படி வீழ்த்தப்பட்டு தீண்டப்படாத சாதியாக்கப் பட்டவர்களுக்கு கல்வி, பொது உரிமை போன்றவை இன்றளவும் மறுக்கப்பட்டு வருகின்றன.
பிறசாதியினருள் பூசாரிச் சாதியான பார்ப்பனச் சாதி மேல்சாதியாகக் கருதப் பட்டு வருகிறது. தமிழ்ப் பார்ப்பனர்களாகிய வள்ளுவர்களின் பூசாரித் தலைமையைக் கைப்பற்றிக் கொண்ட வந்தேறி வடுகப் பார்ப்பனியமே ஆரியப் பார்ப்பனியமாக நிலைத்து கோயில்களிலும் குடும்ப விழாக்களிலும் கொற்றம் புரிந்து வருகிறது.
இவ்வாரியப் பார்ப்பனியத்திற்குத் துணைநின்று சாதி ஒடுக்கு முறையில் முன்னணியில் நிற்பவை பெரு நிலவுடைமையைத் தம் கைகளில் வைத்துக் கொண்டுள்ள நாயுடு, இரெட்டி, நாயக்கர் போன்ற சாதிகளே.
இவர்களின் ஏவல் எடுபிடிகளாக தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு அடுத்த நிலையில் உள்ள - தீண்டாமை என்கிற கொடுமை மட்டுமே இல்லாமல், அத்தாழ்த்தப்பட்ட சாதிகளின் வாழ்வியலுக்கு இணையான - பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் செயலாற்றி வருகின்றனர். தமிழராய் நாம் இணைவதற்குத் தடையான சாதிமுறைமையும் தீண்டாமையும் ஒழிய வேண்டும்.
மதம்:- தமிழர்களின் தொல்மதங்களான சிவனிய - மாலிய மதங்களையும், சிறு தெய்வ வழிபாடுகளையும் விழுங்கிச் செரித்த ஆரியப் பார்ப்பனியம் இந்துத்துவம் என்கிற புதிய பெயரில் தன் நால்வருணக் கோட்பாட்டை புகுத்த முயன்று வருகின்றது. இவ்விந்துத்துவ அச்சுறுத்தல்களுக்கும் கொடுமைகளுக்கும் அஞ்சித் தப்பித்து கிருத்துவ, இசுலாமிய மதங்களுக்கு மாறிய தமிழர்கள் பார்ப்பனிய - வணிக இந்திய அரசினால் புறக்கணிக்கப்படுவதும் மதங்களின் பெயரால் ஒடுக்கப்படுவதும் நிலவி வருகிறது.
இவ்வொடுக்குமுறைகளுக்கு எதிராக அம்மதத்தைச் சார்ந்த தமிழர்கள் உரிமைக் குரல் எழுப்பத் தொடங்கி உள்ளனர். பார்ப்பனிய - வணிக இந்திய அரசு மதச் சார்பற்ற அரசு என்று சொல்லிக் கொண்ட போதிலும் நடைமுறையில் ஒரு ஆரியப் பார்ப்பனிய அரசாகவே செயல்பட்டு வருகிறது.
பெண்ணடிமைத்தனம்:- குமுகத்தின் மீதான அனைத்து பிற அடிமைத் தனங்களோடு குடும்ப வழியான ஆணாளுமை வழியான ஒடுக்கு முறைக்கும் உட்பட்டதாக பெண்ணினம் உள்ளது. இந்திய அடிமைகளாக உள்ள தமிழ் ஆடவர் தம் கீழ்ப்பணியும் அடிமைகளாகப் பெண்களை நடத்துவதைக் கைவிட வேண்டும். தமிழினப் பெண்களும் ஆணாளுமை ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவதோடு அவற்றுக்கு அடிப்படையாக அமைந்துள்ள இந்தக் குமுகச் சூழலை மாற்றியமைத்திட நடக்கும் விடுதலைப் போராட்டத்திலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
மொழி:- நம் தமிழ் மொழி பல நூற்றாண்டுகளாகவே வந்தேறி அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. விசய நகர அரசுகளால் கோயில்களிலிருந்து வெளியேற்றப்பட்டது. நாயக்கர் ஆட்சியில் இசை மொழியான தமிழ் வீழ்த்தப்பட்டது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரை கல்விக் கூடங்களில் இருந்து தமிழ் தூக்கி எறியப்பட்டது. அதனால் நம் அருந்தமிழ் ஆட்சி மொழிக்கான அதிகாரத்தையும் இழந்தது.
ஆட்சியில் ஆங்கிலமும் இந்தியும், கோயில்களில் சமற்கிருதமும், இசையில் தெலுங்கும் இன்று கொற்றம் புரிந்து வருகின்றன. தமிழ் வழக்கறிஞர்கள் தமிழில் வழக்காடும் உரிமை கூட இல்லாதிருக்கின்றனர். ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்று எழுதி வைத்து விட்டு எதிலும் தமிழ் இல்லா நிலையை ஆட்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர். தமிழில் உயர் கல்வி வழங்குகின்ற உரிமையை இந்திய அரசின் தொழில் நுட்ப ஆணையம் தடுக்கின்றது. தமிழில் வழக்காடும் உரிமையை உச்ச நீதிமன்றம் தடுக்கிறது. சென்னை உயர்நீதி மன்றம் என்று தமிழில் பெயர்ப்பலகை வைக்க கூட மறுக்கிறது இந்திய அரசு. அடிமைத் தமிழக அரசோ அனைத்து அரசு ஆணைகளையும் ஆங்கிலத்தில் பிறப்பிக்கிறது.
கல்வி:- தமிழர்களின் கல்வி வெள்ளையரின் வருகைக்குப் பின் வாழ்வியல் கல்வியாக இல்லாமல் மனப்பாடக் கல்வியாக மெக்காலே பாடத்திட்டத்தின் வழியாக மாற்றப்பட்டது. அக்கல்வி வல்லரசிய நலன்களைப் பாதுகாக்கவும் தம் சொந்த குமுகத்தின் மீது வெறுப்படையச் செய்வதாகவும் தன்னம்பிக்கை அற்ற குமுகத்தை உருவாக்குவதாகவும் உள்ளது. தமிழரின் பொறியியல் நுட்பங்கள் மறக்கடிக்கப்பட்டு முதலாளியச் சார்பு பொறியியல் நுட்பங்கள் திணிக்கப்பட்டன. தமிழ் மருத்துவம் புறக்கணிக்கப் பட்டு ஐரோப்பிய எதிர் மருத்துவம் கோலோச்சுகிறது. தமிழரது மரபுக் கலைகளெல்லாம் ஒழிக்கபட்டு விட்டன. கொடுக்கின்ற கல்வி அனைத்தும் தமிழில் இல்லாது ஆங்கிலத்திலேயே உள்ளது. இதனால் தமிழ் மாணவர்கள் தொடர்ந்து கற்கும் வாய்ப்பினை இழக்கிறார்கள். சிந்திக்கும ஆற்றலற்ற கிளிப்பிள்ளைகளை இந்த ஆங்கிலக் கல்வி உருவாக்கியுள்ளது.
இப்படி எல்லா நிலைகளிலும் இந்திய பார்ப்பனிய - வணிக அரசினால் தரகு முதலாளிகளின் நலனுக்காகவும் வல்லரசுகளின் நலனுக்காகவும் பலியிடப் படும் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராட வேண்டியது தமிழரின் கடமையாகும். தமிழக விடுதலைக்குப் போராடுவதன் வழியாகவே அவ்வுரிமைகளை வென்றெடுக்க இயலும். விடுதலை பெற்ற தமிழக அரசை தமிழ்நாட்டு உழைக்கும் தமிழ் மக்களின் தலைமையில் உருவாகும் தேசிய எழுச்சியின் வாயிலாகவே அமைக்க வேண்டும். அதுவே அனைத்து தமிழர்களின் விடுதலையாக அமையும்.
இதையே தமிழர் கழகம் தனது உடனடி கடமையாகவும் திட்டமாகவும் கருதுகிறது. அனைத்துத் தமிழரையும் உழைக்கும் தமிழரின் தலைமையில் அணி திரள அறைகூவி அழைக்கிறது.
தமிழர் கழகத்தின் முழக்கங்கள்
• இழந்த தமிழக எல்லைகளை மீட்போம்.
• தமிழக மண்ணை வெளியாருக்கு விற்பதைத் தடை செய்வோம்.
• ஆற்று நீர் உரிமைகளைக் காக்கப் போராடுவோம்.
• இயற்கை வளச் சுரண்டலைத் தடுத்து நிறுத்துவோம்.
• சூழலைக் கெடுக்காத தொழிலகங்களை நிறுவுவோம்.
• பன்னாட்டுச் சுரண்டலை வேரறுப்போம்.
• உயிர்களைப் பூண்டோடு ஒழிக்கும் அணு உலைகளை மூடுவோம்.
• தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்காகப் போராடுவோம்.
• தமிழக கடலிலிருந்து பன்னாட்டு நிறுவனங்களை விரட்டியடிப்போம்.
• தமிழை ஆட்சி மொழியாக்கப் போராடுவோம்.
• தமிழை எல்லா நிலைகளிலும் பயிற்று மொழியாக்கப் போராடுவோம்.
• தமிழில் படித்தவர்களுக்கே வேலை வாய்ப்பு கிடைத்திடப் பாடுபடுவோம்.
• எம்மதமாயினும் தமிழே வழிபாட்டு மொழி என்றாக்குவோம்.
• ஆரியப் பார்ப்பனியத்தை வேரறுப்போம்.
• சாதி மதங்களற்ற குமுகாயம் படைப்போம்.
• கோயில், மத நிறுவனங்களின் சொத்துக்களை மக்களுடைமை யாக்குவோம்.
• வந்தேறி குடியேற்றத்தை தடுத்து நிறுத்துவோம்.
• தொழிலகங்களுக்காக விளைநிலங்களை சூறையாடுவதை தடுத்து நிறுத்துவோம்.
• மரபு வழி இயற்கை வேளாண்மையை வளர்த்தெடுப்போம்.
• பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுவோம்.
• அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு சம உரிமை என்பதை உறுதிபடுத்துவோம்.
• குடும்ப அமைப்பை குடிநாயகப் படுத்துவோம்.
• உலகத் தமிழரின் உரிமைகளைப் பாதுகாப்போம்.
• உலகெங்கும் போராடுகின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போம்.
• தமிழீழ விடுதலைக்குத் துணை நிற்போம்.
• உழைக்கும் தமிழ் மக்களின் தலைமையில் தமிழக விடுதலைக்குப் பாடுபடுவோம்.
• தமிழக மக்கள் குடியரசை அமைப்போம்.
அமைப்பின் பெயர் : தமிழர் கழகம்
கொடி : மூன்று பங்கு நீளமும் இரண்டு பங்கு அகலமும் கொண்ட மஞ்சள் நிறக் கொடியின் நடுவில் அமைந்த செந்நிற தமிழ்நாட்டு வரைபடத்தில் பண்டைத் தமிழரின் இலச்சினைகளாக இருந்த வில், புலி, கயல் உருவங்களும் அவற்றைச் சூழ்ந்த நெற்கதிரும் உள்ளதாகக் கொடி அமையும்.
இலச்சினை : தமிழ்நாட்டு வரைபடத்தில் பண்டைத் தமிழரின் இலச்சினைகளாக இருந்த வில், புலி, கயல் உருவங்களும் அவற்றைச் சூழ்ந்த நெற்கதிரும் நம் இலச்சினையாக அமையும்.
அமைப்பின் வடிவம் : கிளை, மாவட்டம், தமிழ்நாடு என மூன்று அடுக்கு அளவிலான அமைப்பு.
1. ஓர் ஊரில் அல்லது பேரூரின் ஒரு பகுதியில் குறைந்தது பத்து உறுப்பினர்களைக் கொண்டு கிளை அமையும்.
2. பத்து உறுப்பினர்களுக்குக் குறைவாக இருப்பின் பத்து உறுப்பினர்கள் சேரும் வரை பக்கத்திலுள்ள கிளையின் துணைக்கிளையாக இயங்கும்.
3. உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரைக் கிளைப்பொறுப்பாளராகத் தேர்ந்தெடுப்பர்.
4. கிளைக்கூட்டம் மாதத்திற்கு ஒரு தடவைக் கட்டாயம் கூட்டப்பட வேண்டும்.
கிளைப்பொறுப்பாளர் கடமைகள்:
1. விதிகளின்படி கிளைக்கூட்டங்களைக் கூட்டி ஒழுங்குபட நடத்திச் செல்வார்.
2. கொள்கை வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்வார்.
3. உறுப்பினர் கட்டணம் தண்டுதல் முதலான பிற கணக்குப் பொறுப்புகளை ஏற்பார். கிளைக்கணக்கை மூன்று மாதத்திற்கு ஒருமுறை கிளைக்கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறுவார்.
4. மாவட்ட அமைப்பில் வைப்பதற்கான கிளைச் செயற்பாடுகள் குறித்த அறிக்கையை கிளைக்கூட்டதில் வைத்து ஒப்புதல் பெறுவார்.
1. கழகத்தின் கொள்கைகளைப் பல வகைகளில் முழு மூச்சாய் பரப்புதல், போராட்டங்களில் ஈடுபடுதல்.
2. கழகத்தின் இதழ், வெளியீடுகளைப் பரப்புதல்.
3. ஊர்/பகுதி மக்களின் சிக்கல்களைக் கையிலெடுத்து ஆய்ந்து அவற்றுக்கான தீர்வுகள் காணும் வகையில் பெரும்பான்மை முடிவுப்படி செயற்படுதல்.
4. கருத்தளவில் தன்னைச் செழுமையாக்கிக் கொள்ளுதல். தருக்கங்களில் பங்கு கொள்ளுதல்.
5. புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல். புதிய கிளைகள் தொடங்க முயலுதல்.
1. கிளைகளின் பொறுப்பாளர்கள் அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட அமைப்பின் உறுப்பினர்கள் ஆவர்.
2. இவர்கள் தங்களுக்குள் ஒருவரை மாவட்ட அமைப்பின் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுப்பர்.
3. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவர் கிளைப் பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து விடுபடுவார். அவ்வாறு காலியாகும் கிளைப் பொறுப்பாளர் இடம் மீண்டும் அக்கிளையில் நடத்தப்படும் தேர்தலின் மூலம் நிரப்பப்படும்.
4. இவ்வமைப்பு குறைந்தது மாதத்திற்கொருமுறை கட்டாயம் கூட்டப்பட வேண்டும்.
மாவட்ட அமைப்பு உறப்பினர் கடமைகள்:
1. தத்தம் கிளையின் செயற்பாடுகளைப் பற்றிய அறிக்கையினை உறுப்பினர்கள் மாவட்டக் குழுவின் முன் வைத்து திறனாய்ந்திட வேண்டும்.
2. இயக்கச் செயற்பாடுகளில் கிளைகளுக்கு உதவுதல்.
3. இயக்கச் செயற்பாடுகளில் கிளை அமைப்புகளில் சிக்கல்கள் ஏற்படும்போது சிக்கல்களைத் தீர்ப்பதில் உதவுதல்.
4. மாவட்ட அளவிலான மக்கள் சிக்கல்களைக் கையிலெடுத்து ஆய்ந்து, தருக்கம் செய்து தீர்வுகாண வழி வகுத்தல். போராட்டத் திட்டங்கள் வகுத்துச் செயற்படுதல்.
5. கழகத்தின் கொள்கையைப் பரப்புதல், இதழ் வெளியீடுகள் பரப்புதலை விரிவு படுத்துதல்.
6. புதிய கிளைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுதல்.
மாவட்ட அமைப்பின் பொறுப்பாளர் கடமைகள்:
1. மாவட்ட அமைப்பை விதிகளின்படி கூட்டி ஒழுங்குற நடத்துவார்.
2. தமிழ்நாடு செயற்குழுவில் வைப்பதற்காக மாவட்ட அமைப்பின் செயற்பாடுகள் குறித்த அறிக்கையினை எழுதி, மாவட்ட அமைப்பில் வைத்து ஒப்புதல் பெறுவார்.
3. மாவட்ட அமைப்பின் கணக்குப் பொறுப்பை ஏற்பார். கணக்கை ஆறு மாதத்திற்கு ஒரு தடவை மாவட்ட அமைப்பில் வைத்து ஒப்புதல் பெறுவார்.
1. தமிழ்நாடு அமைப்பு தமிழ்நாடு அளவிலான பொதுக்குழு, செயற்குழு என இரு கூறுகளாக இயங்கும்.
1. அனைத்துக் கிளைகளின் பொறுப்பாளர்களும், மாவட்டப் பொறுப்பாளர்களும் இதன் உறுப்பினர்கள் ஆவர்.
2. கழகத்தின் தலைவர் இதற்கு பொறுப்பாளராகப் பணியாற்றுவார்.
3. பொதுக்குழு குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு தடவை கட்டாயம் கூட்டப்பெற வேண்டும்.
4. கழகத்தின் அமைப்புகளில் பொதுக்குழுவே அதிகப் பொறுப்புடையது.
5. செயற்குழு பரிந்துரைக்கும் கொள்கை, போராட்ட, செயற்பாட்டு திட்டங்களைத் திறனாய்வு செய்து, தருக்கம் செய்து, பெரும்பான்மையினர் ஏற்பு நிலையில் நடைமுறைப் படுத்தும்.
6. பொதுக்குழு கூடாத நேரங்களில் செயற்குழுவினரால் திட்டமிட்டு நடத்தப்படும் போராட்டங்கள், அறிவிப்புகள் ஆகியன குறித்து அடுத்துக் கூடும் பொதுக்குழுவில் திறனாய்வு செய்து உரிய வழிகாட்டுதல்களைச் செய்யும்.
7. அமைப்பு விதிகளில் திருத்தம் தேவைப்பட்டால் பொதுக்குழுவின் மூன்றில் இருபங்கினர் ஆதரவுடன் திருத்தம் செய்யும்.
8. தேவைப்படும் சூழல்களில் பொதுக்குழுவைக் கூட்டும் பொறுப்பு தலைவரையே சாரும்.
1. பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் இரண்டு உறுப்பினர்களைக் கொண்டதாக செயற்குழு அமையும்.
2. இத்தேர்தலில் கழகத்தின் உறுப்பினராக உள்ள எவரும் போட்டியிடலாம்.
3. இச்செயற்குழு குறைந்தது மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கட்டாயம் கூட்டப்பெற வேண்டும்.
4. தேவைப்படும் சூழல்களில் செயற்குழுவைக் கூட்டும் பொறுப்பு தலைவரையே சாரும்.
1. அனைத்து மாவட்ட அமைப்புகளின் செயற்பாடுகள் பற்றிய அறிக்கைகளை வைத்துத் திறனாய்தல்.
2. கழகச் செயற்பாடுகளில் மாவட்ட அமைப்புகளுக்கும் கிளைகளுக்கும் உதவுதல்.
3. கழகச் செயற்பாடுகளில் மாவட்ட அமைப்புகள், கிளைகளில் சிக்கல் தோன்றினால் அவை தீர்க்கப்படுவதில் உதவுதல்.
4. தமிழ்நாடு அளவில் மக்கள் சிக்கல்களைக் கையிலெடுத்து, ஆய்ந்து, தருக்கமிட்டு தீர்வு தேடுதல். தீர்வுக்கான வழி வகைகளை பொதுக்குழுவின் முடிவுக்கு வைப்பது.
5. கொள்கை நோக்கிய போராட்டத் திட்டங்களை முடிவு செய்து பொதுக்குழு முடிவுக்கு வைப்பது.
6. பொதுக்குழு கூடாத நேரங்களில் தேவை ஏற்படின் போராட்ட திட்டங்களை முடிவு செய்து நடத்துவது. பின்னர் பொதுக்குழுவின் கருத்தாய்வுக்கு முன் வைப்பது.
7. கழகக் கருத்து பரப்புதல் குறித்து நாட்டளவில் திட்டமிடுதல்.
8. இதழ் ஆசிரியர் குழுவை அமைத்துச் செயற்படுதல்.
9. வெளியீடுகளை வெளியிடும் குழு அமைத்துச் செயற்படுதல்.
10. புதிய கிளைகள் அமைப்பதற்கான முயற்சிகள்.
1. செயற்குழுவையும் பொதுக்குழுவையும் விதிகளின்படி கூட்டி, அதை ஒழுங்குபட நடத்துவார்.
2. கருத்துப் பரப்பல் பணியினை நாடெங்கும் நடத்திட தம் பெரும்பங்கு உழைப்பை நல்குவார்.
1. செயற்குழு மற்றும் பொதுக்குழு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் செயற்படுத்தும் பொறுப்பு ஏற்பார்.
2. அம்முடிவுகளை மாவட்டக் குழுக்கள் வழியாக கிளைகளுக்கு தெரிவிக்கும் கடமை ஆற்றுவார்.
3. உரிய கால இடைவெளியில் தலைவர் ஒப்புதல் பெற்று செயற்குழு, பொதுக்குழுவினை கூட்டுவார்.
1. செயற்குழு மற்றும் பொதுக்குழுவின் கணக்குகளுக்குப் பொறுப்பேற்பார். கணக்கை ஆறு மாதத்திற்கு ஒரு தடவை செயற்குழுவில் வைத்து ஒப்புதல் பெறுவார்.
2. அனைத்து வகை பொருள் வரவுகளும் செலவுகளும் பொருளாளர் வழியாகவே நடைபெறும்.
1. அ) பொறுப்பாளர் தேர்தல் ஈராண்டுக்கு ஒரு தடவை நடைபெறும்.
ஆ) பொறுப்பாளர் பொறுப்புக்காலம் ஈராண்டு.
இ) ஒருவரே தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒரே பொறுப்பில் இருத்தல் கூடாது.
2. அ) தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர் ஏதோவொரு காரணத்தால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டால், இடைக்காலப் பொறுப்பாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப் படுவார்.
ஆ) பொறுப்பாளர் செயல்பட முடியாத நிலை இரண்டு மாதங்களுக்கு மேல் நீடித்தால் இடைக்கால பொறுப்பாளரே புதிய பொறுப்பாளராக இருப்பார்.
  இ) பொறுப்பாளர் விலகினாலோ, விலக்கப் பட்டாலோ புதியதாகத் தேர்தல் நடக்கும்.
3. 1) வழக்கமான கூட்டங்கள் கிளை, மாவட்ட, செயற்குழு, பொதுக்குழு அமைப்புகளின் கிழமை, மாத, காலாண்டு, அரையாண்டு கூட்டங்கள் தவிர்த்து இடையில்,
அ) பெரும்பான்மை உறுப்பினர்கள் விழைந்தாலோ,
ஆ) உடனடியாகக் கூட்ட வேண்டிய தேவை ஏற்பட்டாலோ,
அந்தந்த அமைப்புகள் கூட்டப்பெற வேண்டும்.
2) கிளைக் கூட்டங்கள் தவிர பிற கூட்டங்கள் ஒரே இடத்தில் அன்றி வெவ்வேறு ஊர்களில்/மாவட்டங்களில் நடத்தப்பட வேண்டும்.
4. அந்தந்த அமைப்புகளின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகளின் படிதான் அமைப்புகள் செயற்பட வேண்டும்.
5. அ) உறுப்பினர்/பொறுப்பாளர் பொறுப்பிலிருந்து விலக விரும்பினால், அந்தந்த அமைப்பில் முன்கூட்டியே உரிய விளக்கங்களுடன் அறிவிப்புக் கடிதம் தர வேண்டும். இவ்விலகல் பற்றி அந்தந்த அமைப்புகள் தத்தம் கூட்டங்களில் வைத்து முடிவு எடுக்கும்.
ஆ) இவ்வாறு விலகியவர்கள் மீண்டும் இணைய விரும்பினால் மீண்டும் கடிதம் தர வேண்டும். இவ்வேண்டுகை, அந்தந்த அமைப்பில் வைத்து ஆய்வு செய்யப் பெற்று முடிவு எடுக்கப்படும்.
6. சரியான நடவடிக்கை அற்ற பொறுப்பாளர்களை நீக்கும் அல்லது நடவடிக்கை எடுக்கும் உரிமை அந்தந்த அமைப்பிற்கு உண்டு.
7. கழகத்தின் சட்ட திட்டங்களை, விதிகளை மீறி நடந்தாலும், போராட்ட நடவடிக்கைகளுக்குக் களங்கம் ஏற்படும் வகையில் நடந்து கொண்டாலும், கழகத்திற்கு எதிராகச் செயற்பட்டாலும் அந்தந்த அமைப்புகளில் வைத்து உசாவி அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒழுங்கு நடவடிக்கைகள்: 1. எச்சரித்தல், 2. இடைநீக்கம், 3. நீக்கம்.
8. இயக்கத்திலோ, இயக்க நடைமுறையிலோ குறைபாடு இருப்பின், நடைமுறைக் கோளாறுகள் இருப்பின் அவற்றை இயக்கத்திற்குள்ளாகவே பேசித் தீர்க்க வேண்டும். இயக்கத்தில் பேசி முடிவெடுக்கப் பட்ட கருத்துகளை வெளியில் திறனாய்வு செய்து கொண்டிருக்கக் கூடாது. அப்படி முரண்பாடு இருப்பின் முடிவெடுப்பதற்கு முன்பே சொல்ல வேண்டும். முடிவெடுத்த பின் முரண்பாடு வருமாயின் அதை எழுத்தால் எழுதி அந்தந்த அமைப்பிற்குத் தெரிவிக்க வேண்டும்.
9. இயக்கத்தின் செயற்பாடுகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மற்ற தனிமாந்த செயற்பாடுகளை விட இயக்கச் செயற்பாடுகளே முகாமையானவை. இயக்கத்தின் கட்டுப்பாடு மிக மிக இன்றியமையாதது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
10. இயக்கத்தில் உள்ள தோழர்கள் இடையில் எவ்வகை முரண்பாடுகள் வந்தாலும் நட்பு முரண்பாடாகவே கருதித் திருத்திக் கொள்ள வேண்டும்.
11. அமைப்புக் கூட்டங்களில் உறுப்பினர்கள் உறுதியாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்ள இயலாத சூழலில் உரிய காரணத்தை எழுத்து வடிவில் அந்தந்த அமைப்பில் அளித்திட வேண்டும்.
12. பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொண்ட பணியைச் செய்யத் தவறும் சூழலில் அதற்குரிய சரியான விளக்கத்தை எழுத்து வடிவில் அளித்திட வேண்டும்.
1. பொறுப்பாளர்கள் உறுப்பினர்களிடமிருந்து உறுப்பினர் கட்டணமாக ஆண்டு ஒன்றுக்கு உருவா பத்து மேனி திரட்டல் வேண்டும். இத்தொகை தமிழ்நாடு செயற்குழுவிடம் அளிக்கப்பெற வேண்டும்.
2. உறுப்பினர் கட்டணம் அன்றி உறுப்பினர்/பொறுப்பாளர் நன்கொடை, கழக ஆர்வலர் ஆதரவாளர் நன்கொடை, பொதுமக்களின் நன்கொடை (தெருத்தெருவாகத் திரட்டல், வீடுவீடாகத் திரட்டல், கடைகளில் திரட்டல்) ஆகிய வழிகளில் நன்கொடை திரட்ட வேண்டும்.
3. பெறப்படும் தொகைக்கு உரிய பற்றுமுறி வழங்கப்பட வேண்டும்.
4. வெளிநாட்டு அரசு அமைப்புகளின் உதவிகளையோ, மதச்சார்பு அமைப்புகளின் நன்கொடைகளையோ ஏற்கக் கூடாது.
5. இதழ், வெளியீடுகள் விற்பனை வரவு அவற்றை வெளியிடுவதற்காகச் செலவிடப்படும்.
6. பொறுப்பாளர்களின் இயக்கம் சார்ந்த செலவுகள் பொருளியல் நிலைக்கேற்ப ஈடு செய்யப்படும்.
7. இயக்கத்திற்கெனத் திரட்டப்பட்ட பொருள் தேவையற்ற நிலையில் செலவழித்தலோ, வீணாக்குவதோ, வேறு நோக்கத்திற்கு பயன்படுத்துவதோ இயக்க நடைமுறையில் குற்றமாகும். அப்படிச் செலவழித்தவர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு செலவழிக்கப்பட்ட தொகை அமைப்பு விதிக்கும் தண்டத்தொகையுடன் சேர்த்து உடனே கட்டப்பட வேண்டும்.
உறுப்பினர்களுக்கான அடிப்படைத் தகுதிகள்
1. தமிழராய்ப் பிறந்து தமிழர் கழகத்தின் கொள்கைகளில் ஈடுபாடு உள்ள உலகெங்கும் வாழும் அனைவரும் உறுப்பினராகும் தகுதி படைத்தவர் ஆவர்.
2. தனிமாந்த ஒழுக்கமும், குமுக ஒழுக்கமும் கடைப்பிடிப்பவராக இருத்தல் வேண்டும்.
3. இலக்கைப் பற்றிய தெளிவும், ஆழ்ந்த பற்றும் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
4. கழகத்தின் மீதும், உறுப்பினர்கள் மீதும் ஆழ்ந்த பற்றும் உள்ளன்பும் கொண்டர்வர்களாக இருக்க வேண்டும்.
5. அமைப்பிற்கும் தலைமைக்கும் முழுமையாக கட்டுப்பட்டு நடத்தல் வேண்டும்.
6. குமுகத்தின் நன்மதிப்பைப் பெற்றிருத்தல் வேண்டும்.
7. தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக அமைப்பிடமோ, பிற உறுப்பினர்களிடமோ பகையுணர்ச்சி கொள்ளாதிருக்க வேண்டும். அமைப்பை விட்டு விலகாதிருக்க வேண்டும்.
8. அமைப்பின் நடவடிக்கைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
9. தன்னைத்தானே நிருவகிக்கும் ஆற்றல் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
10. நம் அமைப்பும் கொள்கையும் தலைமையும் உறுப்பினர்களும் மாற்றத்தை உண்டாக்கும் செயலுக்காகத்தான் என்பதை உணர வேண்டும். செயல் இல்லாவிட்டால் இவை அனைத்தும் வீண்.
11. பொறுப்பாளர் தவறு செய்கிறார் என உறுப்பினரின் அறிவுக்குப் புலப்பட்டால், உடன் அவருக்கு மேல் உள்ளவரிடமோ அல்லது அவருக்கு அடுத்து உள்ளவரிடமோ அதனைத் தெரிவித்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் உறுப்பினர்களுக்கிடையில் கமுக்கமாகப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அமைப்பு அல்லாத மற்றவர்களிடமும் அது பற்றி பேசக் கூடாது.
பொறுப்பாளர் உறுப்பினர் உறவு
1. கண்டிப்பான அதே நேரத்தில் நெகிழ் தன்மையான உறவு.
2. தன்னை விடத் தகுதி குறைந்தவர் என உறுப்பினரை அணுகக் கூடாது.
3. உறுப்பினர் மீது வேலையில்லாத நேரங்களில் அதிகாரம் செய்யக் கூடாது.
4. இருவருக்குமிடையேயான உறவு ஆசிரியர் - மாணவர் உறவு, குழந்தைப் பருவம் தொட்டே பழகி வரும் நண்பர்கள், அண்ணன் தம்பி போன்ற பல்வேறு முறையில் சூழலுக்கேற்ப இயல்பாக அமைய வேண்டும்.
5. உறுப்பினர் செய்யும் சிறு தவறுகளை (இலக்கினைப் பாதிக்காத வகையில்) மென்மையாக ஆனால் கண்டிப்புடன் திருத்த வேண்டும். வெறுப்பிற்கு இடம் கொடுக்கக் கூடாது.
6. உறுப்பினரின் தனித் திறமைகளைக் கண்டறிந்து அதனை கொள்கை சார்ந்து ஊக்கப் படுத்த வேண்டும்.
7. புலி தன் குட்டிக்கு இரையைப் பிடிக்கப் பயிற்சி கொடுப்பதைப் போல உறுப்பினருக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். எடுத்ததும் தனியாக செயலில் ஈடுபடுத்தாமல் மூத்த உறுப்பினர்கள் புதியவரை உடன் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதில் அவர் தேர்ந்த பின் அவரை தனியாகச் செயற்பட ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்.
8. தனக்காக அமைப்பும், பொறுப்பாளரும், உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்ற பாதுகாப்பு உணர்வையும், பொறுப்புணர்வையும் உணரும் வகையில் உறுப்பினரிடம் நடந்து கொள்ள வேண்டும்.
9. உறுப்பினருக்கு கழகத்தின் உறுப்பினர் என்ற பெருமித உணர்வு இருக்க வேண்டுமே தவிர அகந்தை கூடாது. இது மக்களை எளிதாக எண்ண வைத்து விடும்.
10. உறுப்பினர்களுக்கு இடையில் மனக்கசப்பு ஏற்படா வண்ணம் அவர்களுக்கிடையில் ஏற்படும் பூசல்களைக் கூட உடனே தீர்த்து வைக்க வேண்டும்.
11. உரிய நேரத்தில் உரிய வேலைகளைச் செய்வதில் கண்டிப்பாக இருத்தல் வேண்டும். ஒழுங்கும் நேரந் தவறாமையும் மிக அவசியமானது.
12. அடிக்கடி கலந்துரையாடல் வைத்து அவரவர் கருத்துகள், குறைகள் ஆகியவற்றைக் கேட்டறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
13. நாம் மக்களுக்கானவர்கள்; மக்களுக்காக உழைப்பது நமது கடமைதானே தவிர அது அவர்களுக்கு வழங்கும் தானம் அல்ல என்பதை தேவைப்படும் போதெல்லாம் உறுப்பினருக்கு உணர்த்த வேண்டும்.
14. ஒவ்வொரு செயலிலும் நம்மை உறுப்பினர் முன்மாதிரியாக விரும்பும்படி நமது சொல்லும் செயலும் இருக்க வேண்டும்.
மக்களுக்கும் நமக்கும் இடையிலான உறவு
1. நாம் இருக்கும் பகுதியில் மக்களுடன் முரண்படாமல் அவர்களுடன் அவர்களின் சூழலுடன் பொருந்தி நிற்க வேண்டும்.
2. நமக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவு குடும்ப உறவினைப் போன்று இருக்க வேண்டும். அவர்கள் நம்மை அயலார் என நினைக்கும்படி நடந்து கொள்ளக் கூடாது.
3. மக்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு முகாமை அளிக்க வேண்டும். அது அவர்களை நம் இலக்கினை நோக்கித் திருப்புமாறு இருக்க வேண்டும்.
4. நமது குறிக்கோளையும், கோட்பாடுகளையும் மக்கள் இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.
5. மக்களிடம் காணப்படும குறைபாடுகளைப் புரிந்து கொள்ளும்படி சுட்டிக் காட்டி அதனைக் களைய வேண்டும்.
6. எந்த ஒரு இலக்கும் அமைப்பால் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அமைப்பு தலைமைக் குழுவினாலும் மற்ற உறுப்பினர்களாலும் நடத்தப் படுகிறது. தலைமையும் உறுப்பினர்களும் மக்களாலேயே தாங்கப் படுகின்றனர் என்ற உண்மையை உறுப்பினர்களுக்கு உணர்த்தும் அதே வேளையில் மக்களையும் உணர வைக்க வேண்டும்.